சென்னை: தேமுதிக கொடி தின வெள்ளி விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கொடியேற்றி வைத்து பதவியேற்றார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த போது, எங்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கையெழுத்து, உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் நெருங்கும் போது, மாநிலங்களவைக்கான தேமுதிக வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். விஜய்யுடன் கூட்டணி வைப்போமா என்று விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலான கட்சி, இந்தக் கேள்வி எங்களிடம் கேட்கக் கூடாது. அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னைகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
ஜெயக்குமார் சொல்வது ஒன்று, செங்கோட்டையன் சொல்வது ஒன்று. இதில் எது உண்மை, எது பொய் என்பதை அ.தி.மு.க.வைத்தான் கேட்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன், முதல்வரின் மருந்தக திட்டத்தை அறிவித்திருப்பது கண்துடைப்பு. இவ்வாறு பிரேமலதா கூறினார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், பார்த்தசாரதி, விஜயபிரபாகரன், தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.