விழுப்புரம்: சைவம், வைணவம், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அவரது சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் பா.ஜ.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பா.ஜ.க., தேசிய மகளிர் முன்னணி செயலர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
பெண்கள் இருக்கும் போது, ஆபாசமாக பேசுவது, தி.மு.க.,வினரின் வழக்கம். சமூக நீதி, பெண்களுக்கான அரசு என்று கூறி பெண்களை இழிவாகப் பேசுகின்றனர். நாகரீகமற்ற, வக்கிரமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்து மதம் மற்றும் பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது வரவேற்கத்தக்கது.

தவறு செய்யும் அமைச்சர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இந்தியாவிலேயே இதுபோன்ற அமைச்சர்களைக் கொண்ட சிறந்த மாநில அரசு திமுக அரசு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் சிலிண்டர் விபத்து என வர்ணிக்கப்பட்டது. இதை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுடன், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.