சென்னை: உண்மைக்கு புறம்பான தகவல்… மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் ஆர். காந்தி பதிலளித்துள்ளார்.
இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நான்கு இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இவற்றுக்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன. 2024-25-ம் கல்வியாண்டுக்கு சீருடை வழங்கும் திட்டத்துக்கு இதுவரை முன்பணமாகரூ. 250 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு இத்திட்டத்துக்கு சமூக நல ஆணையரின் கடிதப்படி 2 இணை சீருடைக்கு தேவையான துணி விவரங்கள் வழங்கப்பட்டு, 237. 98 லட்சம் மீட்டர் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டங்களில் உள்ள துணி வெட்டும் மையங்களுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டுள்ளது.
சீருடை தைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் 3-வது இணைக்கான துணி உற்பத்தி முடிந்து, 4-வது இணைக்கு முடியும் தருவாயில் உள்ளது.