சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆதிதிராவிட-பழங்குடியின இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக அளித்து வரும் ஊக்கங்களால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் என்பது 91.85 சதவீதமாகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.55 சதவீதம் என்பது 95.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆதிதிராவிட-பழங்குடியின இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக அளித்து வரும் ஊக்கங்களால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் என்பது 91.85 சதவீதமாகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.55 சதவீதம் என்பது 95.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
2024-2025-ம் கல்வியாண்டில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., என்.ஐ.எப்.டி. மற்றும் எப்.டி.டி.ஐ. போன்ற தேசியக்கல்வி நிறுவனங்க ளில் 16 பட்டியல் இன மாணவர்கள் இடம்பிடித்தனர். 2025-2026-ம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 135 மாணவர்கள் என உயர்ந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளிகளில் ரூ.456.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் 868 வகுப்பறைகள் கட்டப்பட்டு கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 3-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.6,604.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் பணியாற்றும் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 213.92 கோடி செலவில் மூன்று வேளையும் உணவு வழங்கும் மகத்தான திட்டத்தை நிறைவேற்றி தாயுமானவர் எனப் போற்றப்படுகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வகையிலும் ஆதிதிராவிட பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்திய அளவில் தமிழ்நாட்டின் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.