கேரளா: புதிய வக்ஃப் சட்டத்தின்படி வாரியங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை விரைவில் தொடங்கும்என்று கேரள வக்ஃப் அமைச்சர் வி.அப்துர்ரஹிமான் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா 2025, கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேறியது.
கேரளத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் புதிய வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தபின், அதன் கீழ் அமைக்கப்படும் முதல் வக்ஃப் வாரியம் கேரளாவில்தான் அமையவிருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய சட்டத்தின்படி, மாநிலங்களில் உள்ள வக்ஃப் வாரியங்கள் அவற்றின் பதவிக் காலம் நிறைவடையும் வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரலாம். கேரளாவில் தற்போதைய வக்ஃப் வாரியத்தின் பதவி காலம் கடந்த டிசம்பர் 14 அன்று நிறைவடைந்துவிட்டது. ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு அதன் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய வாரியம் அமைப்பதற்கான தேவை எழுந்துள்ளது.
இதையடுத்து புதிய வக்ஃப் சட்டத்தின்படி வாரியங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை விரைவில் தொடங்கும்என்று கேரள வக்ஃப் அமைச்சர் வி.அப்துர்ரஹிமான் கூறியுள்ளார்.