சென்னை: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மீண்டும் துவங்கும் நிலையில், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடந்தது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் இது குறித்து ஆலோசிக்கவுள்ளது. மும்மொழிக் கொள்கையை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தென் மாநில முதல்வர்களையும், பா.ஜ., தவிர மற்ற கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் செயல்தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்துக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசுடன் தமிழக அரசும் போராடி வருகிறது.
இந்தப் பிரச்னைகளை நாடாளுமன்ற அவைகளில் எப்படிக் கையாள்வது என்பது குறித்து திமுக எம்பிக்களுக்கு இன்றைய கூட்டத்தில் முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த திமுக எம்.பி.க்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.