கோவை: கோடை காலத்தை சமாளிக்க தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது. எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.