கும்பகோணம்: கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நுழைவு வாயிலில் நேற்று பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு பெரியார், அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தனர்.
விழாவில் திருமாவளவன் பேசியதாவது:- விடுதலை சிறுத்தைகளுக்கு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை விட புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல்தான் பெரிது. அது பாதுகாக்கப்பட வேண்டும். பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் அரசியல் கொள்கைகள் முதன்மையானவை. அது பாதுகாக்கப்பட வேண்டும். வரும் 2026 நமக்கு ஒரு சோதனை. சோதனை மூலம் திராவிட அரசியலை தோற்கடிப்போம் என்கிறார்கள்.

இது திராவிட அரசியலை தோற்கடிக்கவில்லை. சமூக நீதி அரசியலை ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கும் முயற்சி இது. இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆக்ரோஷமாக 50, 60 இடங்களுக்கு மேல் வென்று, அங்கு போட்டியிட்டு, அ.தி.மு.க., ஓட்டுக்கள் அனைத்தையும் பெற்று, எங்கள் ஓட்டுகள் என, காட்டிக் கொள்ள, பா.ஜ.க., முயற்சி செய்கிறது.
இதன் மூலம் அ.தி.மு.க.வை படிப்படியாக பலவீனப்படுத்தி, கரைத்து, நீர்த்துப்போகச் செய்து, அழித்து, தோற்கடிக்கும் உத்தியை கையாண்டு வருகின்றனர். தி.மு.க., தன்னை காக்கும் பலத்துடன் களத்தில் நிற்கிறது. 2026 தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.