சென்னை: தமிழக அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- வரும் 5-ம் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியமானது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் மறுவரையறை செய்தால், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும்.
இதற்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கட்சிகள் முன்வைக்கும் வாதங்கள் செல்லாது. மும்மொழிக் கொள்கையை தமிழக மக்கள் வரவேற்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. பிஜேபி இந்தி படிப்பதை ஆதரிப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காகவே. இது மக்கள் நலன் சார்ந்தது அல்ல. ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை. அவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
முழு நாட்டிற்கும் இருமொழிக் கொள்கை போதுமானது. இந்தியை கட்டாயமாக்குவது ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலையை உருவாக்கும் சதி. எனவே, இந்த சதியை முறியடிக்க வேண்டும். மத்திய அரசு தான் கச்சத்தீவை மீட்க வேண்டும். ஆனால் அதற்கு தமிழக அரசே பொறுப்பு என்பது போல் ஆளுநர் செயல்பட்டு அரசியல் செய்கிறார். திமுக கூட்டணி உடையும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது. தேர்தல் காலத்தில் தொகுதி குறித்த விவாதம் நடக்கும். மற்ற சமயங்களில் மக்கள் பிரச்சனைகளை மட்டுமே பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.