வாஷிங்டன்: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், தனது மனைவி எழுதிய ‘மெலனியா’ என்ற சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் எழுதிய சுயசரிதை புத்தகம் அக்டோபர் 8-ந்தேதி வெளியாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார்.
இதற்கிடையில் டொனல்டு டிரம்ப்பின் பிரசார பொதுக்கூட்டங்களில் அவரது மனைவி மெலனியா டிரம்ப் அதிகமாக பங்கேற்காததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், டிரம்ப் மீதான பல்வேறு பாலியல் புகார்களால் மெலனியா அதிருப்தி அடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், நியூயார்க் மாகாணம் யூனியண்டேல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், தனது மனைவி எழுதிய ‘மெலனியா’ என்ற சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்து பேசிய டிரம்ப், “மெலனியா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். என்னைப் பற்றி நிச்சயம் அவர் நல்ல விதமாகத்தான் எழுதியிருப்பார். ஒருவேளை என்னைப் பற்றி அவர் மோசமாக எழுதியிருந்தால், அந்த புத்தகத்தை வாங்க வேண்டாம் என்று நானே சொல்லியிருப்பேன்” என்றார்.