தலைநகர் டெல்லியில் ஜனவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பஞ்சாப் சட்டசபை தேர்தல், 2022-ல் நடந்தது. இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மி கட்சி சார்பில், பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்தது.
சட்டசபை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் இதுவரை பெண்களுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக கெஜ்ரிவால் தற்போது அப்படியொரு வாக்குறுதியை அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியால் ரூ.1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
அந்த கட்சியால் எப்படி டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்கப்படும்? கேஜ்ரிவால் டெல்லியிலும், பஞ்சாபிலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார். அவரை நம்பி ஏமாற வேண்டாம் என்று டெல்லி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு கூறினார்.