சென்னை: இன்று தமிழகம் வருகை… மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நிலையில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமனம் செய்தது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டிசம்பர் 24 ஆம் தேதி சென்னைக்கு வந்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பியூஷ் கோயில் சந்தித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 நாள் பயணமாக, இன்று சென்னை வரும் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமகவிற்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்த்து வலிமைப்படுத்துவதற்காகவே பியூஷ் கோயல் இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.