சென்னை: நடிகர் விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வென்றவர்கள். 80 சதவீதம் பெண்கள் ஸ்டாலின் பக்கம் தான் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது திமுக மற்றும் பாஜகவை விஜய் நேரடியாகவே விமர்சித்தார். அதாவது பெயரை சொல்வதற்கு கூட விஜய் தயங்குவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என்று வெளிப்படையாகவே சொல்லி பாஜக மற்றும் திமுகவை வெளுத்து வாங்கினார்.
அதன் பிறகு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே மட்டும்தான் போட்டி என்றும் விஜய் கூறினார். நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகும் நிலையில் எத்தனையோ பெரிய கட்சிகள் இருக்கும்போது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே மட்டும்தான் போட்டி என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவும் கோபத்தில் இருக்கிறார்கள். விஜயின் பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் திமுக கட்சியின் அமைச்சர் சேகர்பாபுவும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மன்னராட்சி காத்த கரங்கள், மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம், எங்களுடைய ஆட்சியே என்றும் ஆளும். சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை பெண்கள் தான் தூக்கிப் பிடிப்பார்கள்.
முதல்வர் ஸ்டாலினை தற்போது 80 சதவீதம் பெண்கள் தான் வரவேற்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பிடி உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வென்றவர்கள் என்று கூறினார். இதே போன்று அமைச்சர் கோவி. செழியனும் விஜய் 2 வயது குழந்தை என்றும் நாளை தேர்தல் வைத்தால் கூட திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.