இந்தியா முழுவதும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த அரசியல் சாசன உரிமை உண்டு. அதனால்தான் பீகார், கர்நாடகா மாநில அரசுகள் ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஏற்கெனவே முடித்துவிட்டு புள்ளி விவரங்களைக் கையில் வைத்துள்ளன.
மேலும், தெலுங்கானா மாநில அரசு ஐம்பது நாட்களில் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை பிற மாநில அரசுகள் பின்பற்றி வருவதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளமிடும் ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முடித்த பிற மாநிலங்களைப் பின்பற்ற ஏன் தயங்குகிறார்கள்?

தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே பெரியாரை பெருமையாகப் பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடுகின்றனர். மத்திய அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே மாநில அரசால் கணக்கெடுப்பு நடத்த முடியுமா?
ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதில் மத்திய, தமிழக ஆட்சியாளர்கள் ஒரே போக்கில் பயணிப்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு முன் கூட்டியே கணக்கெடுப்பு நடத்தாமல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தினால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாக களையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.