விஜய் பகவத் கீதையை படிப்பதோடு டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும் என்று விசிக எம்.பி. டி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பகவத் கீதையைப் படியுங்கள், அதில் டாக்டர் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என்பதையும் படியுங்கள்.
விஜய் தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பின்மை தனது கொள்கை என்று அறிவித்த விஜய், இன்று மாநாட்டு மேடையில் நினைவுப் பரிசாக இந்து மதத்தின் அடையாளமாக பகவத் கீதையையும், இஸ்லாத்தின் அடையாளமாக குர்ஆனையும், கிறிஸ்தவத்தின் அடையாளமாக பைபிளையும் பெற்றார். அம்பேத்கர் தனது ‘புரட்சியும் எதிர்புரட்சியும்’ என்ற நூலில் பகவத் கீதையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
“இந்தச் சமூகத்தில் பௌத்தம் ஒரு தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, புத்த மன்னர்களால் ஒடுக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கன் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினர்.
அந்த எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது. பகவத் கீதை இந்த எதிர்ப்புரட்சிக்கு கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது. என்று அம்பேத்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். விஜய் பகவத் கீதையைப் படித்துவிட்டு டாக்டர் அம்பேத்கர் அதைப் பற்றி எழுதியிருப்பதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல்லையெனில் அது அம்பேத்கரை அர்த்தமற்ற வெற்றுச் சின்னமாகப் பயன்படுத்துவதில் முடிவடையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.