வாணியம்பாடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் மீது குற்றம் சாட்டி ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள். இந்நிலையில் நேற்று வாணியம்பாடியிலும் நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
வாணியம்பாடி நகர கட்சி செயலாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் மாவட்டம். நகர தலைவர் பாரத் உள்பட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று காலை திடீரென கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் செயல்பாடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
கட்சியின் பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்சியில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்தனர். திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உட்பட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கடந்த மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்த நிலையில் நேற்று அவர்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தியாளர்கள் விலகிய நிலையில் தற்போது கட்சியில் உள்ளவர்களை இந்த மறுசீரமைப்பு கூட்டம் திருப்திப்படுத்துமா என கோவையில் நாதக சீரமைப்பு கூட்டம் நடத்திய சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, அதிருப்தியாளர்கள் ஒன்று கூடுவது எங்களுக்கு திருப்தியாக உள்ளது என்றார்.