மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை 20-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவிகாலம் விரைவில் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய சட்டசபைகளை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிட்டது.
அதன்படி மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது.
அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகளும் மறைமுகமாக வேலை செய்தன.
இந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 2 மாநிலங்களிலும் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை ஆடினார்கள். இன்று வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடந்தது. நாளை 20-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 23-ந் தேதி (சனிக்கிழமை) ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.