கரூர்: கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. யாரையும் குறை சொல்லி பயனில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தது பெருந்துயரம். உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை. கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது.
நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும். எல்லோரும் சேர்ந்தே இந்த தவறை செய்துவிட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விஜய்டயின் கடந்த கூட்டங்களில் பாதுகாப்பு கொடுக்க தான் செய்தனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்ல கூடாது. பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.
துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது. சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்களில் குடிநீரை அரசு வழங்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.