காஞ்சிபுரம்: திமுகவுக்கு மகளிரின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. புதிது, புதிதாக வருபவர்கள் தி.மு.க.வை அழிப்பேன் என்கிறார்கள். அவர்களின் கனவு ஒரு நாளும் நடக்காது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க. மாணவரணி சார்பில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் 108 -வது பிறந்த நாள் விழா தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் வரவேற்றார்.
விழாவில் 1131 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது::
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் எல்லாம் தமிழகத்தை ஒவ்வொரு தேர்தலிலும் 3 முதல் 4 முறை வலம் வந்து தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். அதனால் தான் எதிர்க்கட்சிகள் வியந்து பார்க்கின்றன. பொறாமைப்படுகின்றன. இவரைப் போன்ற தலைவர்களால் தான் இன்றும் தி.மு.க. 75 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பயணச்சீட்டு இல்லாத பயணத்தை மகளிர்க்கு வழங்குவது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து. பிங்க் பஸ் என்று கூட சொல்லாமல் ஸ்டாலின் பஸ் என்று பெருமையாக சொல்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெண்களின் நலனுக்கு பல புதிய, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதை முறையாக செயல்படுத்தியும் வருவதால் வட நாட்டுப் பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. பெண்கள் எந்தப்பக்கம் இருக்கிறார்களோ அவர்களே தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். திமுகவுக்கு மகளிரின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. புதிது, புதிதாக வருபவர்கள் தி.மு.க.வை அழிப்பேன் என்கிறார்கள். அவர்களின் கனவு ஒரு நாளும் நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.