சென்னை: மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் – கடற்கரை இடையே இன்று காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழித்தடத்தில் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (05.01.2025) தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால பணிகள் நடைபெறுவதால் காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையிலும், அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் 05.01.2025 அன்று ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை இயக்க உள்ளது.
மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.