பேராவூரணி: பேராவூரணி பேக்கரி ஒன்றில், கெட்டுப்போன இனிப்பை வாங்கி சாப்பிட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த ச.நீலகண்டன் என்பவர், பேராவூரணி ஆவணம் சாலை முக்கத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ரசகுல்லா, நெய் ஸ்வீட் என்ற இனிப்புகளை கடந்த மார்ச்.21 ஆம் தேதியன்று வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் வைத்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் மறுநாள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் சென்று கேட்டபோது, கடையில் இருந்த பணியாளர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடையின் உரிமையாளரிடம் தொலைபேசியில் பாதிக்கப்பட்ட நபர் பேசிய போது, அவரும் முறையாக பதிலளிக்காமல், வாடிக்கையாளர் நீலகண்டனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நீலகண்டன், சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, உணவுப் பாதுகாப்பு துறைக்கும் புகார் அளித்தார். இதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடையில் இருந்த பொருட்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், காலாவதியான பொருட்களை உடனடியாக அகற்றுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், கடையில் இருந்த உணவுப் பொருள்களின் மாதிரி சிலவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றார்.
பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உணவுப்பொருள் கெட்டுப் போனதா என தெரியவரும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.