சென்னை: உணவுப்பொருட்களை உண்ணும் ஆசையை தூண்டிவிட அவற்றில் கவர்ச்சிகரமான வண்ண நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இவை உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றன.
பல இடங்களில் பானிபூரியில் கூட கவர்ச்சிகரமாக இருக்கும் வகையில் அவற்றில் நீலம், மஞ்சள் மற்றும் ரசாயன நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் பொதுவாக நீரில் ஒரு சாயமாக பயன்படுத்தப்படுகின்றன.
இது உயிரணு இறப்பு மற்றும் சிறுமூளை, மூளை தண்டு, சிறுநீரகம், கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மேலும் இது புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குக்கீஸ்கள், வறுத்து பொரித்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து உணவுகளிலும் இது போன்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களான சோடியம் நைட்ரேட், ஒலெஸ்ட்ரா என்னும் உணவு சத்து குறைக்கும் திரவம், ப்ரோமினேடட் வெஜிடபிள் எண்ணெய் என்னும் நரம்பியல் கோளாறை உருவாக்கும் தாவர எண்ணெய், மாவு பொருட்களை நொதிக்க வைக்க உதவும் பொட்டாசியம் புரோமைடு, குளிர்பானங்களை கெடாமல் வைக்கும் பொட்டாசியம், பியூட்டிலேடட் ஹைட்ராக்சினியால் என்னும் உணவை நீண்ட காலம் கெடாமல் வைக்கும் ரசாயனம் போன்றவை கலக்கப்படுவதாக உணவு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கண்ணுக்கு தெரியாத இந்த வகை ரசாயனங்கள் மனிதர்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடலில் சேர விடாமல் தடுப்பதுடன் குடல் சார்ந்த பல வகை நோய்களை உருவாக்குகின்றன.
பல நாடுகள் தற்போது இந்த வகை ரசாயனங்கள் கலந்த உணவுகளை தடை செய்ய வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு மாற்றாக காலிபிளவர், பூண்டு, மஞ்சள், பச்சை காய்கறிகள், தக்காளி போன்றவை புற்றுநோயை தடுக்க உதவுவதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பாதிப்பை தடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.