திருச்சி: பத்தாண்டுகளில் இல்லாத வறட்சியாக மே மாதம் போல் மாறிவிட்டது கடந்த செப்டம்பர் மாதம்.
மழையும் இல்லாத, வெயிலும் இல்லாத செப்டம்பர் மாதத்தில் அட்டகாசமான வானிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மழையும் வந்து திருச்சியை எட்டி பார்த்து விட்டு செல்லும். ஆனால் இந்த வருடம் மே மாதத்திலா நாம் இருக்கின்றோம் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போடுமளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத காலநிலை.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி பொதுவாக திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் தினசரி அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக 35.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். ஆனால் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 39.7 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளது.
2014ஆம் ஆண்டிற்கு பின் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது தான். செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டத்தை நமக்கு காட்டுவது போன்று ஆறு நாட்கள் வரை மழை பொழிவை கொடுக்கும், ஆனால் இந்த வருடம் திருச்சி மாநகரில் இரண்டு நாட்கள் மட்டுமே மிதமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே பெரும்பாலும் இதே சூழ்நிலை நீடித்துள்ளது. வறண்ட வானிலைக்கு வடபகுதியில் ஏற்பட்ட வானிலை அமைப்புகளின் காரணமாக காற்றின் ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், காற்றில் ஈரப்பதம் குறைந்து, வளிமண்டலத்தில் மேகங்கள் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதும் இதனால் சூரியக்கதிர்கள் வலுவாக இருப்பதால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.