தஞ்சாவூா்: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் காந்தாராவ்ராசு தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர் சிவக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன், கொள்கை பரப்பு செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் வருகின்ற 30-ந்தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெறும் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு மாநாட்டில் தஞ்சை மாவட்டம் சார்பில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். அதிரை தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத விஷயத்தில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்கள் நலனை பாதுகாத்த கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு பாராட்டு தெரிவிப்பது.
போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்து கட்ட இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் உரிமை சட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெருமுனை, திண்ணைப் பிரசாரம் முறையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், தஞ்சையில் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் பல்வேறு பொறுப்புகளுக்கு 24 பேர் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . முடிவில் தொழிலாளர் பிரிவு செயலாளர் வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.