சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் போட்டியிட 10 தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளார். இதில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள், தவெக உறுப்பினர்கள் அதிகமாக உள்ள தொகுதியை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.

மதுரை மாநாட்டில் பிரம்மாண்டமாக இளைஞர்கள் சக்தியை வெளிப்படுத்தும் விஜய், அடுத்த கட்டமாக சுற்றுப்பயணத்தையும் நடத்த உள்ளார். தேர்தல் அறிக்கையின் சில அம்சங்களையும் இதன் போது வெளியிட உள்ளார். தவெக தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது — “விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார்?” என்பதே.
விஜய் வென்றால் தவெக அடுத்த நிலைக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே மதுரை மேற்கு தொகுதி பேசப்பட்டாலும், தற்போது பட்டியலில் அது இல்லை. திருவொற்றியூர், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விழுப்புரம், நாகை, விருத்தாச்சலம், கடலூர், ரிஷிவந்தியம், தூத்துக்குடி ஆகியவை தேர்வில் உள்ளன.
ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுப்பார் விஜய். கடலோரப் பகுதி, சிறுபான்மை வாக்குகள், பெண்கள், தவெக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகள் ஆகியவை முக்கியம். சுமார் 85 ஆயிரம் புதிய வாக்காளர்களை கவர்வது தவெக நோக்கம். இதனால் மதுரை மேற்கு தொகுதி போட்டியிலிருந்து விலகியுள்ளது. திமுக, விஜய் போட்டியிடும் தொகுதியில் பலத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வலுவான வேட்பாளரை நிறுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. கடந்த லோக்சபாவில் அண்ணாமலைக்கு எதிராக திமுக நேரடி வேட்பாளர் நிறுத்தியது இதற்குச் சான்று.