தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தப் பயணத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய 10 முக்கிய கட்டுப்பாடுகளை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விஜய், டிசம்பர் 20 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திக்க உள்ளார். கடந்த வாரம் திருச்சியில் ஆரம்பித்த இந்தப் பயணம், அங்கு ஏற்பட்ட பரபரப்பால் பெரம்பலூரில் நடைபெறாமல் விட்டது. நாளை நாகை மற்றும் திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இதை முன்னிட்டு, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு கடும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, விஜயின் வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது, கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் நேரில் வராமல் வீட்டிலிருந்தே நேரலை மூலம் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் கட்டடங்கள், கம்பங்கள், சிலைகள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ், பேனர், அலங்கார வளைவுகள் போன்றவற்றை அனுமதியின்றி அமைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் அறிவுறுத்தல்களை மதித்து சட்டம் ஒழுங்கை காப்பது கட்சி தொண்டர்களின் கடமை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வெளியிடப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.