சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, உள்ளிட்ட இடங்களில், கூடுதல் வாகன நிறுத்துமிடங்களுக்காக, 10 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தேர்வு செய்ய, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில ஸ்டேஷன்களில் வாகனங்களை நிறுத்துவதில் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஆலந்தூர், விமான நிலையம், சைதாப்பேட்டை, ஆயர்விளக்கு போன்ற ஸ்டேஷன்களில் காலை 10 மணிக்கே பார்க்கிங் ஏரியா நிரம்பி வழிகிறது.
இதனிடையே, 3 வழித்தடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் 120-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
அனைத்து நிலையங்களிலும் பார்க்கிங் வசதி உள்ளது. இது தவிர, ரயில் நிலையங்கள் அருகே கூடுதல் வாகனங்களை நிறுத்தும் இடங்களை மெட்ரோ கார்ப்பரேஷன் தேடி வருகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சில மெட்ரோ ரயில் நிலையங்களில், பார்க்கிங் பிரச்னை படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகிறது. நாங்கள் அருகிலுள்ள இடங்களை வாங்குகிறோம். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த இடங்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில், கூடுதல் இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.
இதன்படி, கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி புறவழிச்சாலை, சோழிங்கநல்லூர், சிறுச்சேரி, போரூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.