சென்னை: தமிழ்நாட்டில் குவாரி உரிமதாரர்கள் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. 2016 முதல் 2017 வரை ஒரு வருடத்தில் வெட்டியெடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் 100 சதவீதத்தை சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் இழப்பீடாக வழங்க குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. குவாரி உரிமம் வைத்திருந்த 82 பேர் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறப்பட்டாலும், ஒப்புதல் இல்லாமல் குவாரிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. வெட்டியெடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, இழப்பீடு வழங்க அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.
குவாரி உரிமதாரர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணங்களைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். அரசு 3 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நேரில் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் கடிதம் கிடைத்த 2 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.