தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பது தொடர்பான கூட்டுறவுத் துறையின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.ஆர்.,பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், துறை செயலர் சத்யபிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடங்கள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் முதல்வர் மருந்தகங்களில், 950-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அனைத்து உபகரணங்களும் சாதனங்களும் வழங்கப்பட்டு திறக்க தயாராக உள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் 1000 மருந்துக்கடைகளை திறக்க உள்ளார். சுகாதாரத்துறை மூலம் குறிப்பிட்ட மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மருந்தகங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஜெனரிக் மருந்துகளையும் மற்ற மருந்தகங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தனியார் மருந்தகங்கள், பிரதமர் மருந்தகங்கள் போன்ற மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.