சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, குறைந்த விலை மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மது பிரியர்கள் கள்ளச்சாராயத்தின் பக்கம் திரும்பாமல் இருக்க குறைந்த விலையில் மது வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு கள்ளச்சாராயத்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டபோது, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயத்தைத் தடுக்க 100 மில்லி மதுபானத்தை ரூ.15க்கு விற்கத் தொடங்கினர். பின்னர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மலிவு விலையில் மது விற்பனையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 100 மி.லி மதுபானத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.ஆனால் உடனடியாக வசதி செய்து தர முடியாததால் 100 மி.லி மதுபானத்தை சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குறைந்த விலைக்கு விற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.50 முதல் ரூ.80 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு உரிய முடிவுகளை எடுத்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.