சென்னை: தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் பொதுத் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். 12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 4-ல் துவங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணி, ஏப்., 19-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணி, ஏப்., 21-ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏப்., 30-ம் தேதி வரை நடக்கும், திருத்தும் பணியில், 95 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மதிப்பெண்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிந்து, திட்டமிட்டபடி, மே, 19-ல் இரு வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.