பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வில் 13 லட்சம் பேர் எழுதியுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர, கூட்டு நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் மெயின்ஸ் என 2 பகுதிகளாக நடைபெறுகிறது.
மெயின் தேர்வு தேசிய தேர்வு முகமையால் (NTA) ஒவ்வொரு ஆண்டும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.மொத்தம் 13.78 லட்சம் தேர்வர்களில் 13 லட்சம் (94.5%) பேர் தேர்வில் பங்கேற்றதாக என்டிஏ தெரிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், முதுகலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வை ஜனவரி 3 முதல் 27 வரை நாடு முழுவதும் என்டிஏ நடத்தியது. தேர்வு எழுத விண்ணப்பித்த 8.49 லட்சம் பட்டதாரிகளில் 6.49 லட்சம் (76.5%) பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். அவர்களின் விடைத்தாள்கள் விரைவில் திருத்தம் செய்யப்பட்டு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.