சென்னை: சென்னையில் வசிப்பவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்த நேரங்களில், மக்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும், ரயில்வே மூலம் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன., 10 முதல், 13 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் புறநகர் பஸ் நிலையம் ஆகிய 3 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள், 5,736 சிறப்பு பேருந்துகள் உள்பட 14,104 பேருந்துகள் ஜன.10 முதல் 13-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து 4 நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி, ஜன., 15 முதல், 19-ம் தேதி வரை தினமும் இயக்கப்படும், 2,092 பஸ்களுடன், 5,290 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
இதர முக்கிய நகரங்களில், 6,926 பஸ்கள் உட்பட மொத்தம், 22,676 பஸ்கள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் செயல்படும். இது தவிர, tnstc அதிகாரப்பூர்வ செயலி மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியவும், இயக்கம் குறித்த புகார்களை தெரிவிக்கவும் 9445014436 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். கிளாம்பாக்கம் செல்ல, கோயம்பேட்டில் இருந்து 100 பஸ்களும், பிராட்வேயில் இருந்து 100 பஸ்களும், திருவான்மியூர் மற்றும் பூந்தமல்லியில் இருந்து தலா 50 பஸ்களும் இயக்கப்படும். இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். ஆம்னி பஸ்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். காரில் செல்பவர்கள், சென்னை-திருச்சி சாலையை தவிர்த்து, ஓ.எம்.ஆர்., அல்லது திருப்போரூர் – செங்கல்பட்டு மார்க்கமாக சென்றால், பஸ் போக்குவரத்தில் நெரிசல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.