சென்னை: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பால் பாக்கெட்டுகள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் மற்றும் 4,000 பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9 ஆயிரம் கிலோ பால் பவுடர் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த 2 நாட்களாக முதல்வரின் உத்தரவுப்படி, பொதுமக்களுக்கு பால் தடையின்றி கிடைக்கும் வகையில், பால் பண்ணைகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று கூடுதலாக 1.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ”சென்னையில் தினமும் சராசரியாக, 14.50 லட்சம் லிட்டர் பசும்பால் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (அக்.15) கனமழை காரணமாக 1.50 லட்சம் லிட்டர் கூடுதல் விற்பனையானது. சென்னையில் நேற்று (அக்.15) மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையானது. கூடுதல் தேவை எந்த பாதிப்பும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது,” என்றார்.