புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளை செயல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 1989-ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள் அமலுக்கு வரும். ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்த தலைக்கவசங்கள் BIS (இந்திய தரநிலைகள் வாரியம்) நிர்ணயித்த தரநிலைகளில் இருக்க வேண்டும்.

ஹெல்மெட் விதிக்கு கூடுதலாக, 50 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் அல்லது மணிக்கு 50 கிமீக்கு மேல் வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உட்பட அனைத்து L2 வகை இரு சக்கர வாகனங்களிலும், ஜனவரி 1, 2026 முதல் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்துவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் மற்றும் சறுக்குவதைத் தடுக்கும்.
இந்தப் புதிய விதிகள் குறித்த தங்கள் பரிந்துரைகளையும் ஆட்சேபனைகளையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம். இதற்காக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.