புதுச்சேரி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜிப்மரில் மருத்துவர்கள் இன்று (ஆக.13) 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர். ஜிப்மர் வெளிநோயாளி பிரிவு முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு டாக்டர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பெண் கொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், தவறு செய்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
பணியிடத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
புறநோயாளிகள் பிரிவும் சீராக செயல்பட்டது. மூத்த டாக்டர்கள் பணியில் இருந்தனர். பின்னர் இன்று மாலை புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொள்ளும் அமைதி பேரணி கடற்கரை சாலையில் காந்தி சிலை நோக்கி நடைபெறுகிறது.