சென்னை: அணைகளில் நீர் இருப்பை பொறுத்தே நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, 2,009 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 சதவீத மின் உற்பத்தி இலக்கை எட்டியுள்ளோம்.
தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்த இலக்கு எட்டப்பட்டது. குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 4 முக்கிய மின் உற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின் உற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது.
இதிலிருந்து தினமும் 7 மில்லியன் யூனிட் முதல் 10 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலக்கை தாண்டி நீர்மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்கள்.