சென்னையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தில் பண்டிகை முன்பணத் தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான நடைமுறை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், விண்ணப்பித்த அனைவருக்கும் முழுத் தொகையும் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளிவந்ததும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது. ஏற்கனவே ‘களஞ்சியம்’ செயலி வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலேயே இந்த தொகை வங்கி கணக்கில் வருமாறு நிதித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு இந்த முன்பணம் பெரிய ஆதாரமாக இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சில துறைகளுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்படும் நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு இந்த முன்பணமே முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. புதிய தொகை அமலுக்கு வரும் வரை ரூ.10,000 முன்பணத்திற்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, விண்ணப்பித்த அனைவருக்கும் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும் வகையில் ‘பில்’ தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு முன்பணம் வழங்கப்படுவது, வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்ட அரசின் ‘ஹேப்பி நியூஸ்’ என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில், இந்த அறிவிப்பு ஒரு நிம்மதியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.