2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற பகுதிகளை மையமாகக் கொண்டு அக்னி நியூஸ் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு, தற்போதைய அரசியல் சூழலை பிரதிபலிக்கிறது. இதில், திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் முன்னிலையில் இருப்பதாகவும், அதிமுக கூட்டணி பின்னடைவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 21,150 பேரிடம் கருத்து சேகரிக்கப்பட்ட இந்த ஆய்வில், திமுக கூட்டணி 164 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி வெறும் 70 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சில முக்கிய தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பு தெரிவிக்கிறது.

சென்னை உள்ளிட்ட நகர்ப்புற தொகுதிகளில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் 10-12% வாக்குகளைப் பெற்றுள்ளதை கணிப்பு காட்டுகிறது. குறிப்பாக, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், எழும்பூர், ராயபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இந்த கட்சி அதிமுகவின் வாக்குகளைக் குறைத்து உள்ளது. இது, மூன்றாம் அணியின் உருவாக்கம் பற்றிய அரசியல் கவனத்தைக் கிளப்பியுள்ளது.
முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் துல்லியமான கணிப்புகளை வழங்கிய அக்னி நியூஸ், இந்த சட்டமன்றத் தேர்தலிலும் பல அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சி, அதிமுகவின் வாக்கு வங்கி சிதைவுக்கு முக்கியக் காரணியாக காணப்படுகிறது.