உதகை : உதகையில் இரண்டாம் பருவத்தை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி துவங்கியது.
தற்போது 2-வது சீசன் துவங்கியுள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மேடைகளில் 10,000 தொட்டிகளில் 70 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு மாதம் சிறப்பு மலர் கண்காட்சி நடத்தப்படும். 2 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா முழுவதும் 4.5 லட்சம் மலர்ச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டாவது சீசன் உள்ளது. இந்த ஆண்டுக்கான இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளதால் உதகை தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடப்பட்டன. மேலும், நடைபாதைகள், மலர் பாத்திகள் மற்றும் மரங்களின் அடியில் 125 வகையான 4 லட்சம் மலர் செடிகள் நடப்பட்டன.
அதில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான மலர் கண்காட்சி துவங்கியுள்ளது. பசுமை தமிழகம் என்ற கருத்தை வலியுறுத்தி, மலர் வடிவமைப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 7,500 பூந்தொட்டிகள் கொண்ட புல்வெளியில் சந்திரயான் விண்கலம் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.