சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தீபாவளியன்று பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க சென்னை காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானோர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபலுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து, வேடிக்கை பார்க்க முயன்றால், வெடிக்கும் பட்டாசுகள் அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
எனவே, பட்டாசுகளை கொளுத்தி விளையாட வேண்டாம். பொது இடங்களில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்திருந்தனர் மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை காவல்துறையில் இதுவரை 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.