சென்னை: பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, அங்கு தரையிறங்க முடியாத 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்கியது. பெங்களூருவில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக, அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சிலிகுரியில் இருந்து 160 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 154 பயணிகளுடன் ராஜ்கோட்டிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், 137 பயணிகளுடன் ஹைதராபாத்திலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து வந்த ஒரு சரக்கு விமானம் ஆகியவை மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் தரையிறங்க முடியவில்லை.
பின்னர், 4 விமானங்களும் சென்னைக்கு வந்து தரையிறங்கின. இதேபோல், டெல்லியில் இருந்து வந்த 2 விமானங்கள் திருப்பதியில் தரையிறங்கின. பெங்களூருவில் வானிலை சீரானபோது, சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்குச் சென்று தரையிறங்கின.