சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில், 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் முன்னிலையில் சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அரசு துக்கம் அனுசரித்து வரும் நிலையில் திறப்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், சி.வி.எம்.பி எழிலரசன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், பொது நூலக இயக்குநர் பொ.சங்கர், பபாசி துணைத் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலர் எஸ். முருகன், பொருளாளர் W.J.சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புத்தகக் கண்காட்சியில் 900-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து ஸ்டால்களிலும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் சலுகை உண்டு. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் கண்காட்சியை பார்வையிடலாம். நுழைவு கட்டணம் ரூ. 10. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
புத்தகக் கண்காட்சியையொட்டி, ஜனவரி 7-ம் தேதி காலை 8.30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், 8-ம் தேதி காலை 8 மணிக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்கிறார். முன்னதாக, மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் (சரஸ் மேளா) பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
புத்தக கண்காட்சி அரங்கம். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகள் (வீட்டுப் பொருட்கள்) இடம்பெற்றுள்ளன. ஜன., 9-ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.