பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் தூக்கு பாலம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி நாளை மண்டபம் வருகிறார். இதற்காக ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய பாம்பன் ரெயில் பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து புதிய ரெயில் தூக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நாளை அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு மண்டபம் ஹெலிபேடுக்கு வருகிறார்.
பின்னர், காரில் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12 மணிக்கு புதிய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைத் திறந்து வைத்து புதிய ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் பிரதமர் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ரயில்வே ஏற்பாடு செய்துள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். அப்போது, வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கு நான்கு வழிச் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவஸ்கனி, தர்மர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதியம் 2.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் வருகை தரும் பாம்பன் பாலம் மற்றும் ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி, மர்மநபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.