எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் ஆட்டு சந்தை தென்கிழக்கு மாநிலத்தின் புகழ்பெற்ற ஆட்டு சந்தைகளில் ஒன்றாகும். இந்த வாரச்சந்தைக்கு சனிக்கிழமைகளில் வியாபாரிகள் குவிந்து வருவதால், விரும்பிய இன ஆடுகள் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் கிடைப்பது மட்டுமின்றி விற்பனையில் நல்ல லாபமும் கிடைக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், எட்டயபுரம், எப்போதும் வென்றான், கழுகுமலை பகுதிகளில் மானாவாரி விவசாயிகளின் பிரதான தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. இதுதவிர நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக இந்த ஆட்டு சந்தையில் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை விற்பனை செய்யப்படும்.
ஆனால் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரித் போன்ற பண்டிகை காலங்களில் கூடுதல் விற்பனை நடைபெறுவது வழக்கம். வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், எட்டயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனை வாங்க நெல்லை, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர்.
போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். எட்டயபுரம் சந்தைக்கு அதிகாலை முதல் ஆடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சர்க்கரை ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வளர்ந்த ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. சுமார் 7 ஆயிரம் ஆடுகள் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.