கண்காளி அறக்கட்டளையின் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கி செப்டம்பர் 1 வரை 5 நாட்கள் தொடரும். ‘பெண்களை மேம்படுத்தினால் மனிதநேயம் மேம்படும்’ என்ற கருப்பொருளில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில் 64 யோகினிகள் (தெய்வங்கள்) கொண்ட ஓவியக் கண்காட்சி நேற்று சென்னை ஆழ்வார்பேட்டை எல்தாம் சாலையில் உள்ள ‘மை பங்களா’வில் தொடங்கியது.
இந்த நிகழ்விற்கு கண்காளி அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பீனா உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 5 நாள் நடைபெற்ற கண்காட்சியில் சாரதா மடத்தின் துறவி மாதாஜி பிரவ்ராஜிகா தர்மாத்ம பிராணா, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் பீனா உன்னி கிருஷ்ணன் வரைந்த தாரா, நர்மதா, யமுனா, சாந்தி, வருணி, ஷேம்காரி, ஐந்த்ரி, வாராஹி, ரன்வீரா உள்ளிட்ட 64 யோகினிகள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன.

இந்த 64 யோகினியின் ஓவியங்கள் பெண் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களால் பாராட்டப்பட்டன. இது குறித்து பீனா உன்னி கிருஷ்ணன் கூறியதாவது:- 64 யோகினிகள் உலகின் சக்திவாய்ந்த பெண் ஆற்றலைக் குறிக்கும் தெய்வீக உருவங்கள். இந்த யோகினிகள் தைரியம், அறிவு, படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சி போன்ற பல்வேறு குணங்களைக் குறிக்கின்றனர். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 64 யோகினியின் ஓவியங்களை வரைவதற்கான பணி 2015-ல் தொடங்கி 2020-ல் நிறைவடைந்தது.
தற்போது இந்த ஓவியங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், பெண் சக்தியை முன்னுரிமைப்படுத்தி கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்காட்சி மூலம், ஆண்களும் பெண்களும் சமம் என்ற கருத்தையும் நாங்கள் முன்வைத்துள்ளோம்.
செப்டம்பர் 1-ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல பெண் ஆளுமைகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஆன்மீக பேச்சாளர்கள் இடம்பெறுவார்கள். அதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.