ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள இலங்கை தலைமன்னார் பகுதியில் நேற்று, கடலோர ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் ஒரு சந்தேகத்துக்கிடமான படகை மடக்கினர். அந்த மிதவை போன்ற சிறிய படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்த கடற்படையினர், படகில் சோதனை நடத்தினர். அப்போது அலுமினிய முலாம் பூசப்பட்ட உலோகக் குண்டுகள் சில காணப்பட்டன. அந்த உலோகங்கள் தங்கம் என உறுதி செய்யப்பட்டதும், அதனுடன் மொத்தம் 8.5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்றது ராமேசுவரத்திற்கு மிக அருகில் உள்ள தலைமன்னாரில். துரித வேக படகில் சில நிமிடங்களில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதி கடத்தலுக்குப் புகழ்பெற்ற பகுதியாகவும், இரு பக்கத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வருவதாலும், கடல் வழியே பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாகவே உள்ளது. கஞ்சா, ஹெராயின், பீடி இலை, மஞ்சள் மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமல்லாமல், தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்களும் இந்த வழியாக கடத்தப்படுவது இடையிடையே வெளியாகி வருகிறது.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட இருவரும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துடன் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தங்கத்தின் எடை 8.5 கிலோ என உறுதி செய்யப்பட்டது. சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில், கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போன்களில் தமிழகத்தை சேர்ந்த சிலர் தொடர்பான தொலைபேசி எண்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தங்கக்கட்டிகள் யாருக்காக கொண்டு வரப்பட்டன? ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள யார் இதில் தொடர்புடையவர்கள்? என்பதைக் கண்டறிவதற்காக இலங்கை கடற்படையினரும், உளவுத்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.8 கோடி என மதிப்பிடப்படுகிறது. இதுதொடர்பாக ராமேசுவரம் மத்திய-மாநில உளவுத்துறை போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.