சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அவர் கூறியதாவது:- தகவல் தொழில்நுட்ப சொத்துக்கள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசின் முதல் சைபர் பாதுகாப்புக் கொள்கை 2020-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை இணைத்து புதிய டிஜிட்டல் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக சைபர் பாதுகாப்புக் கொள்கை 2.0 2024-ல் வெளியிடப்பட்டது.
இதை திறம்பட செயல்படுத்த, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையால் தமிழ்நாடு கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) உருவாக்கப்பட்டது. மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் இணைந்து, சைபர் பாதுகாப்பிற்கான உள் வழிமுறையாக இந்த குழுவை உருவாக்கியது. இந்த தன்னாட்சி அமைப்பு அனைத்து அரசு துறைகளுடனும் இணைந்து செயல்படுகிறது.

இதன் மூலம், 500-க்கும் மேற்பட்ட அரசு வலைத்தளங்கள் கையாளப்படுகின்றன. இதேபோல், 1,200 ஐடி சொத்துக்கள் பராமரிக்கப்படுகின்றன. சைபர் பாதுகாப்பு குறித்து 130 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன, மேலும் 3,200 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுத் துறைகளில் 36 தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 103 தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதனுடன், தமிழ்நாட்டில் 80,039 சந்தேகத்திற்கிடமான ஐபி முகவரிகள் (ஐபி முகவரி – இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண்) அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.