கோவை: ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வரும் நிலையில், A சான்றிதழ் காரணமாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 18 வயதிற்குட்பட்டோர் தியேட்டரில் அனுமதிக்கப்படுவதில்லை என்ற விதியின் காரணமாக, கோவையில் 17 வயது மாணவருக்கு படத்தை பார்க்க மறுக்கப்பட்டது. இதனால் அந்த மாணவர் வெளியிட்ட ஆதங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான இந்தப் படம், ரஜினி, சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட பலரும் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. விடுமுறை நாட்களை முன்னிட்டு பல திரையரங்குகளில் டிக்கெட்கள் ஹவுஸ்ஃபுல் ஆனது. ஆனால் குடும்பத்தோடு வந்த சிறார்கள், மாணவர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை புரோசோன் மாலில் உள்ள ஐநாக்ஸ், கேஜி சினிமாஸ் ஆகிய இடங்களில், 18 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் நிர்வாகம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், 17 வயது மாணவர் ஒருவர் தன் ஆதங்கத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “என் குடும்பத்தில் 8 பேர் டிக்கெட் புக் செய்திருந்தோம். எனக்கும் என் தங்கைக்கும் அனுமதி இல்லை என முழு குடும்பமும் வெளியே நிற்கிறது. சென்னையில் என் நண்பர்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டார்கள். விதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். நாங்கள் பணத்தையும் இழந்துவிட்டோம். முன்பதிவு செய்யும் ஆப்பில் முன்பே அறிவிப்பு கொடுத்திருந்தால் இப்படி ஏமாற்றம் ஏற்படாது” எனக் கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய படங்களுக்கு முன்பே தணிக்கை சான்றிதழ் அடிப்படையில் சரியான அறிவிப்புகளை திரையரங்குகள் மற்றும் ஆன்லைன் புக்கிங் தளங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.