கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான அரசுப் பள்ளி, கொரோனா காலத்தில் மின்கட்டணத்தை செலுத்த முடியாத சூழலில் தவித்தது. இந்த நிலைமையில், மின்வாரிய அதிகாரிகள் மின்சார இணைப்பை துண்டிக்க விரைந்தனர். இதனைத் தடுக்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலையிட்டது.
ஊராட்சி உறுப்பினர்களின் உதவியுடன் ரூ.10 லட்சம் செலவில் சோலார் மின்சார உற்பத்தி தகடுகளை பள்ளியின் மேற்கூரையில் அமைத்தனர். இதனால், பள்ளிக்கு தேவையான மின்சாரத்தை தன்னிறைவு பெற்றுள்ளனர். அந்த சோலார் மின்சார உற்பத்தி தகடுகளில் இருந்து நாள் தோறும் 40 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் பள்ளிக்கு தினசரி வெறும் 5 யூனிட் மின்சாரமே தேவையானது. இதனால் மீதமுள்ள மின்சாரத்தை கேரள மின்வாரியத்திடம் விற்பனை செய்யும் திட்டத்தை அப்போது பள்ளி நிர்வாகம் வகுத்து உள்ளது. இந்த முயற்சியானது கேரள அரசுப் பள்ளியின் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது, இந்த பள்ளியின் சாதனை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மேலும் இதனை அனைத்து பள்ளிகளும் பின்பற்றலாம் என்பதற்கான யோசனை உருவாகியுள்ளது.